Friday, July 17, 2009

புதிய தத்துவம

[என்னுடைய பெயர் குறிப்பிடாமல் என்னுடைய கவிதை ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே பதியப்பட்டிருந்தாலும் மறுபடியும் பதியவேண்டிய சூழ்நிலை. என்னுடைய "பானிபட் இதயங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து அந்தக் கவிதையை மறுபடியும் பதிகின்றேன்...ரிபீட்டு.. ]



சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்
http://nilavunanban.blogspot.com/2006/04/blog-post_26.html


பெண்ணே ! உன் மொழிகள் ...
------------------------------------

உலகின் மொழிகள் மூவாயிரமாம் ! - இல்லை இல்லை - உன்
விழிகள் பேசும் மொழிகளும் சேர்த்து ஒரு கோடியே மூவாயிரம் !!

அற்புதமாய் சில நேரங்களில்
காதலுடன் ஒரு பார்வை என்னை கடந்து போகும் ..
நீ என்றால் நெஞ்சில் ஓர் நிறமாலை

உன் ஒவ்வொரு கூந்தலும் என் உயிர் தாங்கும்
சிரம் பிரியும் சில கூந்தல்கள் ...
என் உயிர் குறையும் அந்நாட்களில்

நீ கண்களை மூடித்திறக்கும் தருணங்களில் -
கருவிழி மறைந்து போகும் இமைகளுக்கிடையில் ...
இறந்து பிறக்கிறேன் நான்

என் எதிரே நீ இருந்தால் என் மௌனம் கலைக்காதே
வெற்று வார்த்தைகளால் என் காதல் விளங்காது ...
காதலாய் கரைந்திருப்பேன் - மௌன வேஅலைகளில்

என்றேனும் ஓர் நாள் இது நேரிடும் -
அப்போது ...
செத்து மடிந்த என் சிதிலம் சேர்த்து
உயிர்பித்துப் பார் - என்னை மீண்டும் ஒருமுறை ...
என் காதல் புரியும்


விதை நீ
இன்றைய விதை
நாளைய விருட்சம்!!
உன்னகுள் இருக்கும் திறமைகளை தட்டி எழுப்பும் பொருட்டே
என்னை அனுப்பினான் இறைவன்..
இதோ நான் உன்னக்காக உறுதுணையாக..
உன்னகுள் இறக்கும் விருட்சத்தை நான் அறிவேன்
உலகிற்கு நீ அறிவி!!



------------

ஆம்
தனிமை கொன்றுவிடும் தான்..
உன்னை நீ உணர்ந்துகொள்ள thanimaikol
தனிமையில் தான் நீ நீ ஆகிறாய்
உன் பலன்களும் பலவீனங்களையும் பட்டியலிடு
பலன்களை கொண்டு பலவீனங்களை கொன்று
இமயம் வரை உன் சாதனைகளை ஒலிக்கசெய்
உன் சாதனைகளை நீயே முறியடி
உனக்கு நிகர் நீ மட்டுமே என்பதை பறைசாற்று
மலைகாதே..சாதிப்பது எளிதல்ல..
சோதனைகள் பல நீ சந்திப்பாய்..
ரோம் நகரம் ஒரே நாளில் கட்டியது அல்ல..
ஒரு முத்து என்பது சிப்பியின் பலவருட தவம்..
கலங்காதே நிழலாய் உன்னுடன் நான் இருப்பேன்
உன்னை தட்டி கொடுக்க..

---------------------------
அம்மா !!!
அம்மா, இந்த சொல்லை சொல்லும் போது தான்
என்ன பல இனிமைகள் !!!
வெயிலில் நான் விளையாடி களைப்பாக
வீட்டினுள் வர , அப்பா என்னை கண்டித்த போது..
பிள்ளையே வெயிலில் ஆடி களைப்பாக
வந்து இருக்கான் அவனை ஏன் வைவானேன் என்று,
உன் கணவன் என்பதையும் மறந்து அவரை கண்டித்து !!!
அவர் சென்ற பிறகு என்னை செல்லமாக கண்டிப்பாயே ,
"வெயிலில் விளையாடினால் கருத்துவிடுவாய் என்று" -
உன் பிள்ளை கருப்பானவன் என்பதையும் மறந்து...

என் புன்னகை கண்டு , உன் முக மலர்ச்சியை காண
இருகண்கள் போதாது - எனக்கு மட்டும் அல்ல
உலகில் உள்ள அணைத்து பிள்ளைகளுக்கும் ...

உன் வார்த்தைகள் கண்டிப்பு தோரனைகளில் வந்ததில்லை - ஆனால்
உன் அன்பு பார்வையில் , அடிபணியும் என் கர்வங்கள் ......

உன் கரம் பற்றி நான் நடக்கையில் - என் பிள்ளை
அவனாகவே நடக்கிறான் என்று சொல்லி ,
உன் கரம் விட்டு தன்னம்பிக்கையோடு
நான் நடை பழக வெயித்தாயே .....
"முதல் முறையாக உன்னிடம் கற்று கண்டது (கொண்டது) தன்னம்பிக்கை".

அன்புடன் நீ தரும் முத்தத்தை பெறும் போது ,
கடவுளை திட்டியதுண்டு "எனக்கு ஏன் இரு கன்னங்களை மட்டும் கொடுத்தாய் ?" என்று..

பள்ளி முடிந்து நான் வீட்டிற்கு வர ,
என் புத்தக பையை நீ வாங்கி கொண்டு -
என்ன கணம் கணக்கிறது - என்று சொல்லி
உன் மன கணத்தை என்னிடம் மறைப்பாயே !!!

எனக்காகவே வாழ்ந்து என்னை நினைத்தே வாழ்ந்த ,
உனக்காக நான் என்ன செய்ய போகிறேன் ?


--------------------------------------------
ஒன்.. டூ.. த்ரீ..

வாசற்படியில் அமர்ந்து
கடக்கும் வாகனங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்தச் சிறுவன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
சட்டைப் பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன வாகனங்கள்.

இருபது சேரக் காத்திருக்கிறான் அவன்.
சேரும் இருபதை
என்ன செய்யப்போகிறானெனப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.

************************************
கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.

****************************
சண்டை முடிந்து
தெருவோரம் கிடந்த
ஒற்றை இரப்பர் செருப்பின்மீது
ஏறி நிற்கிறது
போலீஸ் வண்டி.
**************************

அவனும்... நானும்

ஆலயத்தில் அவனுக்கு
அம்மன் தரிசனம் வேண்டுமென்று
ஓரடி முன்னே
உந்திக் கொள்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
ஓரடி பின்வாங்கி
நிற்கிறேன் நான்.

****************************

சுகம்.. சுகமறிய ஆவல்...

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது இரண்டு
குழந்தைகள் இருக்கிறார்கள்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது ஐந்து
பத்திரிகைகள் இருக்கின்றன.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது இரண்டு
இசைப் பிரியர்கள் இருக்கிறார்கள்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது ஒரு
காதல் ஜோடி இருக்கிறது.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது
ஒரு நண்பன் கிடைக்கிறான்.

ரயில் பயணம் சுகமானது.
எல்லாப் பெட்டிகளிலும்
குறைந்தது
........................
......................... ...........................

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
“ச்சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல”
என்றுவிட்டுப் போகிறான்
அன்ரிசர்வ்டில் வந்த அந்த நண்பன்.
-------------------------------------------------------

No comments: